மாவனெல்லை அல் ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் 28 மில்லியன் ரூபா செலவில் புதிய இருமாடிக் கட்டடம் திறப்பு

மாவனெல்லை, தானகம அல் ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக் கட்டடம் அண்மையில் சுற்றாடல் அமைச்சர் மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி தம்மிக்க பட்டபெண்டி தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கலாநிதி மொஹமட் ஹசன் அலி மொஹமட் ஜமால்தீன் அவர்களின் முழு அனுசரணையில் 28 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. பாடசாலை மாணவர் இசைக்குழுவினரால் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதன் பின்னர், கட்டடத்தைத் திறந்து வைக்கும் முகமாக நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமந்த ரணசிங்க, மாவனெல்லை அரச கட்சி பிரதம அமைப்பாளர் ஜீவன் ஹரிச்சந்திர, வலயக் கல்விப் பணிப்பாளர் இந்திரஜித் ஜயக்கொடி மற்றும் பாடசாலை அதிபர் நிசா மொஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.