தாஜ் மஹால் சலவைக் கல் பலகை டிசம்பர் 9 அன்று ஐக்கிய இராச்சியத்தில் ஏலம் விடப்படவுள்ளது

தாஜ் மஹாலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 200 ஆண்டுகள் பழமையான சலவைக் கல் பலகை, பிரித்தானிய ஏல நிறுவனமான லியோன் அன்ட் டர்ன்புல் நிறுவனத்தால் டிசம்பர் 9 அன்று ஏலம் விடப்படவுள்ளது.
இஸ்லாமிய மற்றும் இந்திய கலை ஏலத்தில் இந்த பலகை £20,000 முதல் £30,000 வரை ஈட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதன் முதல் பொது விற்பனையாகும்.
கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி கேர்ணல் பவுனோல் பிப்ஸ், 1816 இல் நினைவுச்சின்ன பராமரிப்பை மேற்பார்வையிடும் போது இந்த பலகையை பெற்றுக்கொண்டார். பின்னர் 1823 இல் அதை பிரித்தானியாவுக்கு கொண்டு சென்றார்.
இந்த பொருள் பேரரசர் ஷாஜகானின் கல்லறையில் உள்ள எல்லைகளை ஒத்த மலர் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இது இரண்டு வரலாற்று கடிதங்கள் மற்றும் ஒரு பழைய புகைப்படத்துடன் வருகிறது.