சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் இறுதி நிலை நோயாளர்களின் எண்ணிக்கையை 30% குறைக்க முடியும் – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் இறுதி நிலை சிறுநீரக நோய் நோயாளர்களின் எண்ணிக்கையை 30% குறைக்க முடியும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் நடைபெற்ற இலங்கை சிறுநீரகவியல் சங்கத்தின் ‘நெப்கொன் 2026’ மாநாட்டில் அறிவித்தார்.
சங்கத்தின் தரவுகளை மேற்கோள் காட்டிப் பேசிய கலாநிதி ஜயதிஸ்ஸ, நாட்டின் சனத்தொகையில் சுமார் 10% அல்லது 2.2 மில்லியன் மக்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சிகிச்சையை மட்டும் வழங்குவதை விட, நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பக் கண்டறிதலுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டளவில் 112,000ஐ எட்டியுள்ளதுடன், சுமார் 8,000 பேர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான வருடாந்த செலவு ரூ. 16.8 பில்லியன் ஆகும். இதேவேளை, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2024இல் 241 ஆக இருந்து 2025இல் 557 ஆக அதிகரித்துள்ளது.