நுவரெலியா கால்பந்து சங்கத்தின் முதல் சர்வதேச மத்தியஸ்தராக ரி.எப். சூடீன் நியமனம்

நுவரெலியா கால்பந்து சங்கம் தனது 90 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் உருவாக்கிய முதல் சர்வதேச கால்பந்து மத்தியஸ்தராக ரி.எப். சூடீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டுபாயில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்துப் போட்டிக்கான மத்தியஸ்தர் குழுவில் இணைந்துள்ளார்.
இப்போட்டி 2026 நவம்பர் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் மத்தியஸ்தர் அகாதமியில் நான்கு வருட பயிற்சிக்குப் பின்னர் சூடீன் இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார். அங்கு அவர் தனது தொழில்நுட்ப அறிவையும் போட்டி நடுவர் திறன்களையும் வளர்த்துக்கொண்டார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் மத்தியஸ்தர் பணிப்பாளர் சம்பத் நகந்தல ஆகியோர் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். நுவரெலியா கால்பந்து சங்கத்தின் தலைவர் எம்.எஸ். லபீர், இந்த மைல்கல் சங்கத்திற்கும் பிராந்தியத்திற்கும் பெரும் பெருமையைத் தருவதாகத் தெரிவித்தார்.