இலங்கையர்களில் சுமார் 19% பேருக்கு நீரிழிவு நோய் – பிரதி சுகாதார அமைச்சர்

இலங்கை சனத்தொகையில் சுமார் 19% அல்லது ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பன சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என அவர் எச்சரித்தார். அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். தாமதமான கண்டறிதல் அதிக செலவுள்ள சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்று அல்லாத நோய்கள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விஜேமுனி மேலும் தெரிவித்தார்.
இலங்கை நீரிழிவு சங்கத்தின் தலைவர் ஆலோசகர் டொக்டர் மணில்கா சுமனாத்திலக்க, நாட்டின் வயது வந்தோரில் 15% இற்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், கொழும்பு மாவட்டத்தில் வயது வந்தோரில் சுமார் நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் மதிப்பிட்டார்.