ஜப்பான் – இலங்கை பொருளாதார வழித்தடத்தின் கீழ் ஏற்றுமதி உற்பத்தித் தளமாக இலங்கையை ஜப்பான் ஆராய்கிறது

ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா நவம்பர் 19 அன்று பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் உள்ள லங்கா ஹார்னஸ் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார். முன்மொழியப்பட்ட ஜப்பான்-இந்தியா-இலங்கை பொருளாதார வழித்தடத்தின் கீழ் இலங்கையின் உயர் மதிப்பு உற்பத்தித் திறன்களை அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
ஜப்பானின் வர்த்தக அமைச்சு மற்றும் ஜெட்ரோ (JETRO) ஆகியனவற்றால் ஊக்குவிக்கப்படும் இந்த முன்முயற்சி, பிராந்திய தொழில்துறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லங்கா ஹார்னஸ் நிறுவனம் 17 நாடுகளுக்கு வாகன வயர் ஹார்னஸ்கள் மற்றும் பாதுகாப்பு சென்சார்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 80 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 1,000 பேர் பணிபுரிகின்றனர்.
நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ரோஹன் பல்லேவத்த, கொள்கை நிலைத்தன்மை, போட்டித்தன்மை வாய்ந்த எரிசக்தி செலவுகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட சலுகைகள் ஆகியவற்றுடன் இலங்கை 5 பில்லியன் டொலர் பெறுமதியான வாகன உதிரிபாக ஏற்றுமதித் தொழில்துறையை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்தோ-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், 35% உள்நாட்டு பெறுமதி சேர்க்கையுடன் கூடிய தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் முன்னுரிமை அணுகலை வழங்குகிறது என்றும், இது ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.