கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் காஷ்மீர் கறுப்பு தினத்தை கருத்தரங்கு, கண்காட்சியுடன் அனுஷ்டித்தது

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டதைக் குறிக்கும் காஷ்மீர் கறுப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் ஒரு கருத்தரங்கையும் புகைப்படக் கண்காட்சியையும் நடத்தியது.
இந்நிகழ்வில் பாகிஸ்தான் புலம்பெயர் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆதரவுச் செய்திகளும் வாசிக்கப்பட்டன.
பேச்சாளர் ஷிராஸ் யூனுஸ், 1947 இல் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டதே தொடர்ச்சியான துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று கூறி, அப்பிரதேசத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்தார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யர் நசீர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களுக்கு இணங்க அமைதியான தீர்வை வலியுறுத்தி, பாகிஸ்தானின் இராஜதந்திர, தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.