HNB இலாபம் 33 பில்லியன் ரூபாவை எட்டியது

ஹட்டன் தேசிய வங்கி (HNB) 2026 செப்டெம்பர் மாதம் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் வரிக்குப் பிந்திய இலாபமாக 33 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் 33.6 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
மொத்தக் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 313.5 பில்லியன் ரூபாவால் 20.7 சதவீதம் அதிகரித்துள்ளன. வைப்புக்கள் 251.7 பில்லியன் ரூபாவால் 12.8 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் மூலம் நிதிநிலை அறிக்கை வளர்ச்சி இந்தச் செயற்பாட்டுக்கு உந்துசக்தியாக அமைந்தது.
நிகர வட்டி வருமானம் 23.6 சதவீதம் அதிகரித்து 85.5 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. நிகரக் கட்டணம் மற்றும் தரகு வருமானம் 25.4 சதவீதம் அதிகரித்து 20.6 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. மொத்தச் செயற்பாட்டு வருமானம் 22.9 சதவீதம் அதிகரித்து 112.7 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
சேதக் குறைப்பிற்கு முன்னரான செயற்பாட்டு இலாபம் 28.8 சதவீதம் அதிகரித்து 71.9 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணிக்கொண்டு வங்கி கடன்கள் மற்றும் வைப்புக்களை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளதாக முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த தெரிவித்தார்.