ஞானசார தேரரின் 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்காக பொது பல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 18 அன்று உறுதி செய்தது.
ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டை நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்தது. தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி. குமரன் ரத்னம், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறினார்.
சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் 2016 மார்ச் 30 அன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குரகல விகாரை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவையின் 291 ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.