எட்டு வரவுசெலவுத் திட்டக் கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் நாடு தழுவிய போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது

அரசாங்கத்தின் மூன்றாவது வரவுசெலவுத் திட்டம் புதன்கிழமை (11) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எட்டு கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (10) முதல் நாடு தழுவிய போராட்டங்களையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இப்போராட்டத்திற்கு சுகாதார ஊழியர்களை அழைக்கும் துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வெளியே சங்கம் ஞாயிற்றுக்கிழமை (08) விநியோகித்திருந்தது.
வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்தது 5 சதவீதத்தை இலவச சுகாதார சேவைகளுக்கு ஒதுக்குதல், வெற்றிடங்களை நிரப்புதல், சுகாதார உதவியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை 1/160 ஆக நிர்ணயித்தல் மற்றும் ஐந்து நாள் வேலை வாரங்களில் மேலதிக நேரங்களுக்கு இழப்பீடு வழங்குதல் என்பன கோரிக்கைகளில் அடங்கும்.
முன்னைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகக் கூறி, அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவோம் என சங்கம் எச்சரித்துள்ளது.