2025 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் கிட்டத்தட்ட 40% குறிப்பிடத்தக்க அளவில் அமுல்படுத்தப்படவில்லை: வெரிடே ரிசேர்ச் கண்டுபிடிப்பு

வெரிடே ரிசேர்ச்சின் ‘வரவுசெலவுத் திட்ட வாக்குறுதிகள்’ மதிப்பீட்டின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான 36 உயர் பெறுமதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் 14, அதாவது கிட்டத்தட்ட 40%, குறிப்பிடத்தக்க அளவில் அமுல்படுத்தப்படவில்லை.
மதிப்பிடப்பட்ட ஒவ்வொரு முன்மொழிவும் ரூ. 500 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதியுடையதுடன், மொத்தமாக ரூ. 212 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், முழுமையாக அமுல்படுத்தப்பட்ட முன்மொழிவுகள் 2024 இல் 17% ஆக இருந்தது 2025 இல் 33% ஆக உயர்ந்துள்ளது. இது 2017 இல் மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த வீதமாகும்.
வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டதால் அமுலாக்கத்திற்கு குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும், மொத்தமாக 15 முன்மொழிவுகள் (41%) முழுமையாக அல்லது குறிப்பிடத்தக்க அளவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஏழு முன்மொழிவுகளின் (19%) முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லை.