மாற்றுத்திறனாளிகளுக்கான தனியான அமைச்சு வரவுசெலவுத் திட்டக் கோடுகளை பாராளுமன்றக் குழாம் முன்மொழிந்துள்ளது

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்காக அனைத்து அமைச்சுக்களிலும் தனியான வரவுசெலவுத் திட்டக் கோட்டை அறிமுகப்படுத்துமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழாம் முன்மொழிந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வருட வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைத் தொகுப்பதற்கு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி அமைப்புக்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டதாக பிரதி இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். வட மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கலந்தாலோசனைகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ஆறு மாவட்டங்களில் கலந்தாலோசனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச தரங்களுக்கு அமைவான புதிய மாற்றுத்திறனாளி சட்டமூலத்தை பாராளுமன்றக் குழாம் தயாரித்து வருகிறது. அதேவேளை, சைகை மொழிச் சட்டம் மற்றும் விசேட கல்வித் துறை சீர்திருத்தங்களையும் முன்னெடுத்து வருகிறது.
கூடுதலாக, தலைவரின் தலையீட்டுடன் வட்ஸ்அப் காணொளி அழைப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழி பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஊடாக 119 பொலிஸ் அவசர சேவையை அணுக முடியும்.