இலங்கைக்கும் ADB இற்கும் இடையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (MSME) துறையை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான ஒப்பந்தங்களில் நவம்பர் 23 அன்று கைச்சாத்திட்டன.
கொழும்பில் உள்ள பொது திறைசேரியில் வைத்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷனா சூரியப்பெருமவும் ADB இன் இலங்கைக்கான பணிப்பாளர் ஷானன் கோவ்லினும் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்ச்சித்திட்டம் 2026 முதல் 2030 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கடன் வசதியில், கொள்கை நடவடிக்கைகளை நிறைவுசெய்த பின்னர் ஒற்றைத் தவணையாக எதிர்பார்க்கப்படும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான வரவுசெலவுத் திட்ட ஆதரவுக் கடனும், பங்குபற்றும் வங்கிகள் மூலம் சலுகை அடிப்படையிலான நிதியுதவியை வழங்கும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைத்தரகுக் கடனும் அடங்கும்.
நிறுவனத் திறனை வலுப்படுத்துதல், நிதி உள்ளடக்கத்தை அதிகரித்தல் மற்றும் பசுமையாக்குதலை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாகப் பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள், புதிய தொழில்முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குப் பதிலளிக்கும் வணிகங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.