சிறு பௌத்த பிக்குவை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: பிக்குவுக்கு விதிக்கப்பட்ட 14 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

அம்பாறை விகாரை ஒன்றில் 11 வயது சிறு பௌத்த பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த பிக்குவுக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 17 அன்று உறுதி செய்தது.
நீதியரசர்களான பி. குமாரரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அம்பாறை மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனக் கண்டறிந்தனர். அந்தத் தீர்ப்பு ரூ. 40,000 அபராதம் விதித்ததுடன், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்காக ரூ. 500,000 இழப்பீடாகவும் செலுத்த உத்தரவிட்டது.
பிரதான பிக்கு தனது நம்பிக்கைக்குரிய பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றம் அவதானித்தது. பாதிக்கப்பட்டவர் தான் துறவறம் பூண்ட பின்னர் சுமார் பத்து மாதங்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக சாட்சியமளித்தார். விகாரை கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் குமாரரத்தினம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் கனடாவின் நீதித்துறை முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி, குழந்தை சாட்சியின் நம்பகத்தன்மையை குழந்தை பருவ குணாதிசயங்களை புறக்கணிக்கும் தரநிலைகளால் தீர்மானிக்கக்கூடாது என்று கூறினார்.