சினிமா டிக்கெட் VAT வருவாய் பங்குகள் அடிப்படையில் கணக்கிட 2027 வரவுசெலவுத் திட்டம்

சினிமா டிக்கெட்டுகளுக்கான பெறுமதிசேர் வரியை (VAT) மொத்த டிக்கெட் மதிப்பின் அடிப்படையில் அல்லாமல், ஒவ்வொரு பங்குதாரரின் வருவாய் பங்கின் அடிப்படையில் கணக்கிட 2027 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டம் முன்மொழிகிறது என்று இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் சினிமாத் துறைக்கு VAT அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பதிவு, வரி வசூல் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள கொடுப்பனவுகளில் ஏற்பட்ட சிக்கல்களை இந்த சீர்திருத்தம் நிவர்த்தி செய்கிறது என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வேவா தெரிவித்தார்.
இந்த முன்மொழிவின் கீழ், பங்குதாரர்கள் VAT இற்காக தனித்தனியாகப் பதிவு செய்வார்கள். குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் வருவாய் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு 40%, திரையரங்கு உரிமையாளர்களுக்கு 50% மற்றும் விநியோக சபைகளுக்கு 10% எனப் பிரிக்கப்படும்.
குளிரூட்டப்படாத திரையரங்குகளில், தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் தலா 45% பெறுவார்கள், 10% விநியோக சபைகளுக்குச் செல்லும். உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு கேளிக்கை வரியாக ஒதுக்கப்படும் வருவாய் VAT இலிருந்து விலக்கு அளிக்கப்படும்.